"அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும் அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் எனக்கும் உண்ணக்…

"அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும் அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்களேன்." என்று கேட்டார்கள் உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள்கூறியதாவதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக்குழுவொன்றை எதிர்கொள்ள படைப் பிரிவு ஒன்றில் எங்களை அனுப்பினார்கள். எங்களுக்கு அபூஉபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள், ஒரு பை பேரீச்சம் பழத்தை எங்களுக்குப் பயண உணவாகக் கொடுத்தார்கள். எங்களுக்குக் கொடுக்க வேறெதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை, அபூஉபைதா (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பேரீச்சம் பழமாக எங்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் முஹம்மத் இப்னு முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்) அதை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள் (அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காதே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள் குழந்தை வாயிலிட்டுச் சுவைப்பதைப் போன்று நாங்களும் அந்தப் பேரீச்சம் பழத்தைச் சுவைப்போம், அதற்கு மேல் தண்ணீரும் அருந்திக்கொள்வோம், அன்றைய பகலிலிருந்து இரவு வரை அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. நாங்கள் எங்களிடமிருந்த தடிகளால் மரத்தில் அடி(த்து இலை பறி)ப்போம் பிறகு அதைத் தண்ணீரில் நனைத்து அதையும் உண்டோம். பிறகு நாங்கள் கடற்கரையோரமாக நடந்தோம் அப்போது கடலோரத்தில் பெரிய மணல் திட்டைப் போன்று ஏதோ ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. அங்கு நாங்கள் சென்றோம் அங்கே (அம்பர்) எனப்படும் ஒரு பிராணி கிடந்தது. (தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் செத்ததாயிற்றே என்று கூறினார்கள். பிறகு "இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே (இதை) உண்ணுங்கள்" என்று கூறினார்கள் அந்த அம்பர் மீனை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலிமையாகிவிட்டது. நாங்கள் அந்த அம்பர் மீனின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்தோம் அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம் அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் பதிமூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அதன் விழிப் பள்ளத்தில் உட்காரவைத்தார்கள். மேலும் அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவைத்தார்கள் பிறகு எங்களிடமிருந்த ஒரு பெரிய ஒட்டகத்தில் சிவிகை பூட்டி அதில் ஏறி அந்த எலும்பிற்குக் கீழே கடந்துபோனார்கள் (அந்த எலும்பு தலையைத் தொடவில்லை அந்த அளவுக்குப் பெரியதாக இருந்து) பிறகு அந்த மீனை (அரை வேக்காட்டில்) வேகவைத்து பயண உணவாக எடுத்துக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை தெரிவித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும், அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்களேன் என்று கேட்டார்கள். உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி வைத்தார்கள். அதற்கு தலைவராக அபூ உபைதா (ரழி) அவர்களை நியமித்தார்கள்.அதாவது குறைஷியர்களுக்கு உணவுவையும், வாட் கோதுமையையும் சுமந்து செல்லும் ஒரு வியாபார கூட்டத்தை எதிர்கொள்வதற்காக தயார் செய்யப்பட்ட படைப்பிரிவிக்கு தலைவராக அபூ உபைதா ரழி அவர்களை நியமித்தார்கள்.அவர்களிடம் ஈத்தம் பழங்கள் நிரப்பப்பட்ட ஒரு தோலினாளான பையொன்றையும் வழங்கினார்கள் அவர்களின் தலைவர் கொண்டு சென்ற உணவுப் பொருட்கள் குறைவாக இருந்ததனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஈத்தம் பழம் கொடுத்தார்கள் அதனை அவர்கள் வாயில் இட்டு சுவைத்து நீரை அருந்திக்கொண்டது மட்டுமல்லாமல் ஒட்டகம் சாப்பிடும் மரஇலையையும் தங்களது தடியினால் அடித்துப் பறித்து அதன் சொரசொரப்பான தன்மை நீங்குவதற்கு நீரில் நனைத்து உண்டார்கள். அவர்கள் கடற்கரையை அடைந்த போது அங்கே மணல் குன்றை போன்ற ஒன்றை கண்டனர். அதன் அருகே சென்று பார்த்தபோது அம்பர் எனும் பெயரால் அழைக்கப்படும் பெரிய மீனாக இருந்தது. குர்ஆனின் கூற்றின் அடிப்படையில் தானாக இறந்த பிராணிகளை சாப்பிடுவது ஹராம் என்பதினால் அதனை சாப்பிடுவதை அபூஉபைதா ரழி தடுத்தார்கள்.பின்னர் நிர்ப்பந்த நிலையில் மரணித்த பிராணிகளை சாப்பிடுவது ஆகும் என்பதினாலும், அவர்களின் பிரயாணம் அல்லாஹ் அனுமதித்த விடயத்திற்காக இருந்ததினாலும் அவரின் ஆய்வு முடிவை மாற்றிக் கொண்டு அதனை சாப்பிட அனுமதித்தார்கள். தாமாக செத்த கடல் பிராணிகளை சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டது என்ற விடயம் அவர்களுக்கு தெரியாமலிருந்தது. நிர்பந்தத்தை ஆதாரமாகக் கொண்டு அதனை சாப்பிட்டது மட்டுமல்லாமல் அதனை மதீனாவிற்கும் கொண்டுவந்தார்கள்.இந்த விடயத்தை நபியவர்களிடம் குறிப்பிட்ட போது அதனை அங்கீகரித்து அதிலிருந்து நபியவர்களும் சாப்பிட்டார்கள்

التصنيفات

அனுமதிப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட மிருகங்களும் பறவைகளும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போர்களும் படையனுப்புதல்களும்