இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாகஅப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறுகின்றார்கள் : ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது''.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) கூறுகின்றார்கள். அதாவது இஸ்லாம் ஒரு கட்டிடத்தைப் போன்றது. இவ்ஐந்து விடயங்களும் அக்கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரத் தூண்களைப் போன்றாகும். 1. உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சாட்சியம் கூறுதல், இதுவே ஏகத்துவ வார்த்தையாகும், இதுவன்றி இஸ்லாம் இல்லை, இதனை வாயினால் மொழிதல், அதன் அர்த்தத்தை அறிந்து, அதன்படி செயல்படல் அவசியமாகும். அத்துடன் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் சாட்சியம் கூறுதல். அன்னார் கூறியவற்றில் ஆதாரபூர்வமானவற்றை நம்புதல், அவர்களது ஏவல்களை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் கொள்வதுடன், அவர்கள் காட்டித் தந்த பிரகாரமே அல்லாஹ்வை வணங்க வேண்டும். 2. தொழுகையை நிலைநாட்டுதல், இது இரு சாட்சியங்களுக்கு அடுத்து பிரதான தூணாகும். தினமும் ஐவேளைகள் தொழுவது அவசியமாகும். இதனால் தொழுகை ஓர் அடியானுக்கும் அவனது இரட்சகனுக்கும் இடையில் பலமான தொடர்பை ஏற்படுத்துகின்றது. தொழுகையை நிலைநாட்டுதல் என்பது அதனைத் தொடர்ந்து விடாமல், உரிய முறையில் நிலைநாட்டுதலாகும். 3. ஸகாத் வழங்குதல், இது பொருள் ரீதியான ஒரு வணக்கமாகும். வருடத்திற்கொரு முறை, அல்லது அறுவடையின் போது குறித்த பொருள்களில் நிறைவேற்ற வேண்டும். இதன் பயன் தன்னோடு மாத்திரம் நின்றுவிடாமல் பிறருக்கும் சென்றடைகின்றது, இதனால் தான் நோன்பு, ஹஜ்ஜை விட இது முற்படுத்தப்பட்டு, தொழுகைக்கடுத்து கூறப்பட்டுள்ளது. 4. அல்லாஹ்வின் மாளிகைக்குச் சென்று ஹஜ் செய்தல். இது உடல் ரீதியான ஒரு வணக்கமாகும். ஏனெனில் மனிதன் இதனைத் தானே முன்வந்து செய்ய வேண்டும், முடியாவிட்டால் இன்னொருவரைத் தனக்கு பதிலாக ஹஜ் செய்ய வைக்கலாம், இது பொருள் ரீதியான வணக்கமும் கூட, ஏனெனில் இதனை நிறைவேற்ற பணம், தேவையான பொருட்கள் அவசியமாகின்றன. 5. ரமழானில் நோன்பு நோற்றல், இது சம்பந்தப்பட்ட நபருடன் மாத்திரம் நின்று கொள்ளும் உடல் ரீதியான வணக்கமாகும். இதில் மேலதிகமாக ஏதும் செய்வதில்லை, மாறாக நோன்பை முறிக்கக் கூடியவற்றைத் தவிர்ந்து கொள்வதுதான் நோன்பாகும். இது வருடத்தில் ஒரு தடவை ரமழான் மாதம் முழுவதும் கடமையான ஒன்றாகும். முதலாம் தூண் இன்றி இஸ்லாம் இல்லை, இரண்டாம் தூணாகிய தொழுகையும் அவ்வாறுதான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) கூறுகின்றார்கள் : "விசுவாசியான ஒரு மனிதனுக்கும் இணைவைப்பு, இறைநிராகரிப்பு என்பவற்றுக்கும் இடையிலான வேறுபாடு தொழுகையை விடுவதாகும்". (ஆதாரம் : முஸ்லிம்). இந்த நபிமொழியை வெளிப்படையாகவே புரிய வேண்டும், இதற்கு முரணான செய்திகள் ஏதும் இடம்பெறவில்லை. ஸலப் அறிஞர்கள் விளங்கியதற்கு மாற்றமான கருத்துக்களே இதற்கு முரணாக வந்துள்ளது. தொழுகையை விடுபவன் காபிர் என்பதில் நபித்தோழர்கள் ஒருமித்துள்ளனர். அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) கூறுகின்றார்கள் நபித்தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த செயலையும் விடுவதை இறைநிராகரிப்பாகக் கருதுவதில்லை. அல்மர்வஸி "தொழுகையின் மேன்மை வலுப்படுத்தலிலே"எனும் நூலிலும், திர்மிதிஅவரின் ஜாமிஃலேயும் குறிப்பிட்டுள்ளனர் ஏனைய மூன்று தூண்களையும் தகுந்த காரணமின்றி விட்டால் அவருடைய இஸ்லாத்தில் குறைபாடுள்ளது, அவர் மோசமான வழிகேட்டில், பாரிய ஆபத்தில் உள்ளார், எனினும் வேறு ஆதாரங்களின் அடிப்படையில் அதன் மூலம் அவர் காபிராக மாட்டார்.

فوائد الحديث

பல கூறுகளைக் கொண்ட ஒன்றைத் தெளிவுபடுத்தும் போது ஆரம்பத்திலேயே அதன் எண்ணிக்கையைக் குறிப்பிடுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். இதனால் எண்ணப்படும் விடயங்களை முழுமையாக அறிதல், அதில் ஆர்வத்தை ஏற்படுத்தல், அந்த எண்ணிக்கையில் ஏதாவது விடுபடும் போது அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளல் போன்ற பல பயன்கள் இவ்வாறு எண்ணிக்கையை ஆரம்பத்தில் கூறி ஒன்றைத் தெளிவுபடுத்துவதில் உள்ளது.

இரு சாட்சியங்களும் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டதாகும், அவ்விரண்டையும் சேர்த்தே ஏற்றுக் கொள்ள வேண்டும், இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது பயனளிக்காது.

இரு சாட்சியங்களும் தான் அனைத்துத் தூண்களுக்கும் , அல்லாஹ்வை நெருங்குவதற்காக செய்யப்படும் அனைத்து நற்செயல்களுக்கும் அடிப்படையாகும். இரு சாட்சியங்களின் அடிப்படையில் செயல்கள் அமையாவிட்டால் அவை செய்தவர் மீதே திருப்பப்பட்டு விடும், ஏற்கப்பட மாட்டாது, அல்லாஹ்விடத்தில் எவ்விதப் பயனும் அளிக்காது.

இந்த இரு சாட்சியங்களும் மார்க்கத்தின் உள்ரங்கமான, வெளிப்படையான என அனைத்து செயல்களையும் உள்ளடக்குகின்றது.

எந்தவொன்றிலும் முக்கியமானதற்குத் தான் முன்னுரிமை வழங்கி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.

தொழுகையை சரியான முறையில் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது முக்கியமாகும்.

நோன்பு, ஸகாத், ஹஜ் போன்றனவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும், அவற்றில் ஒன்று குறைந்தாலும் அவனது மார்க்கத்தில் குறை ஏற்பட்டு விடும்.

மார்க்கத்தை அறிவதில் இந்த நபிமொழி மிகப் பெரிய அடிப்படையாகும், அதன் தூண்கள் அனைத்தையும் இது ஒருங்கிணைத்துள்ளது, எனவே இதனையே சார்ந்திருக்க வேண்டும்.

இந்த ஐந்து கடமைகளும் தனிநபர் கடமைகளாகும். ஒரு சிலர் நிறைவேற்றினால் போதுமென்ற சமூகக் கடமையல்ல.

التصنيفات

வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்., இறைத்தூது, இஸ்லாம், தொழுகையின் அவசியமும் அதனை விட்டுவிடுபவருக்கான சட்டமும், ஸகாதின் அவசியமும் அதனை விட்டுவிடுபவருக்கான சட்டமும்