'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை…

'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூமாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை பிரகாசமாகும். திருக்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஒரு ஆதாரமாகும்; தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் விடுகின்றான். ஒன்று அதற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்'

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

புறச்சுத்தம்; வுழூ மற்றும் குளித்தலினால் நிகழ்கிறது, அது தொழுகைக்கான நிபந்தனைகளில் ஒன்று என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. எனும் கூற்று அல்லாஹ்வை புகழ்ந்து அவனை அவனுக்கே உரிய பூரண பண்புகளால் வர்ணிப்பதைக் குறிக்கும். இவை மறுமையில் மீஸானில் நிறுக்கப்படும் அவ்வாறு நிறுக்கப்படும் போது அவை அமல்களின் தராசை நிரப்பிவிடும். என்பது இதன் கருத்தாகும். . 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' (எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே) ஆகிய கூற்றுக்களானது அல்லாஹ் எல்லாவிதக் குறைகளிலிருந்தும் தூய்மையானவன் என்பதைக் காட்டும்.அத்துடன் அவனைக் கண்ணியப்படுத்தி அவனை நேசம் கொண்டு அவனின் கண்ணியத்திற்கு பொருத்தமாக அவனை வர்ணிப்பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையிலான பகுதியை நிரப்பிவிடுகிறது. (அஸ்ஸலாது நூருன்)'தொழுகை ஓளியாகும்' என்ற வாசகம் ஒரு அடியானுக்கு தொழுகையானது அவனது உள்ளத்திலும், முகத்திலும்,மண்ணறையிலும்(கப்ரிலும்) மண்ணறையிலிருந்து விசாரணைக்காக எழுப்பப்படும் போதும் ஒளியாக அமையும் என்ற கருத்தைக் குறிக்கும். 'அஸ்ஸதகது புர்ஹானுன்' தர்மம் அத்தாட்சியாகும் என்பது ஒரு முஃமினின் ஆழமான நம்பிக்கையின் உண்மைத்தன்மையை பிரதிபளிக்கும் ஆதாரமாக தர்மம் அமையும் என்பதாகும். அதாவது மறுமையில் அடியார்களுக்கு வாக்களிக்கப்பட்டவற்றை நம்பாத நயவஞ்சகன்; தர்மம் செய்வதிலிருந்து விலகியிருப்பதால் அவனிலிருந்து முஃமினை வித்தியாசப்படுத்தும் அடையாளமாகவும் இது அமைகிறது. 'பொறுமை பிரகாசமாகும்' அஸ்ஸப்ரு என்பது மனதை பதற்றம் மற்றும் வெறுப்பு போன்றவற்றிலிருந்து கட்டுப்படுத்திக்கொள்வது என்பதைக் குறிக்கிறது. சூரிய ஒளியைப்போன்று வெப்பமும், சுடரும் கலந்த நிலையில் உள்ள பண்பாக பொறுமை காணப்படுகிறது.அதாவது பொறுமை; மனதை அடக்குதல்-கட்டுப்படுத்தல்- என்பது மிக சிரமமான விடயம். அதற்கு உள்ளத்துடன் போராடுதல் மற்றும் உள்ளம் விரும்பும் மனோஇச்சைகளை கட்டுப்படுத்துதல் போன்றன தேவைப்படுகின்றன.இவ்வாறான பொறுமையின் மூலம் பிரகாசத்தைப் பெற்றவன் அந்தப்பிரகாசத்தின் விளைவாக சரியான பாதையில் அவன் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு அது காரணமாக அமையும்.பொறுமை பல வகைப்படும் 1- அல்லாஹ்வுக்கு வழிபடுவதில் பொறுமையை கடைப்பிடித்தல் 2- அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் மனதை அடக்கி பொறுமை காத்தல் 3- உலகத்தில் நிகழும் பலவகையான துன்பங்கள் மற்றும் சோதனைகளில் பொறுமைகாத்தல், போன்றன முக்கியமானவைகளாகும். அல்குர்ஆனை ஓதி அதன் போதனையை கடைப்பிடித்தொழுகின் அது உனக்கு சான்றாதாரமாக அமையும் அல்லது அதனை ஒதாது அதன் போதனைகளை கடைப்பிடிக்காது விட்டுவிட்டால் அது உமக்கு எதிராக சான்றளிக்கும் ஆதாரமாக அமைந்து விடும். அதனை தொடர்ந்து நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்கள் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்து பல்வேறு தொழில்களுக்காக வெளிக்கிழம்பி பல்வேறு இடங்களுக்குச் செல்வார்கள் என்பதை இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் . இவ்வாறு செல்வோரில் சிலர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வழிப்படுவதில் உறுதியாக இருந்து நரகத்திலிருந்து தம்மை விடுவிடுவித்துக்கொள்வோரும், சத்திய மார்க்கத்திலிருந்து தடம்புரண்டு பாவகாரியங்களில் ஈடுபட்டு அதன் மூலம் தம்மை நாசத்திற்கு உட்படுத்தி நரகத்திற்கு செல்வோறும் உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

சுத்தம் இரண்டு வகைப்படும்; ஓன்று புறச்சுத்தம் இது வுழூ செய்தல் குளித்தல் போன்ற காரியங்களால் ஏற்படுகிறது.இரண்டாவது அகச்சுத்தம் இது ஏகத்துவம், நம்பிக்கை (ஈமான்) நற்செயல் ஆகிய விடயங்களால் ஏற்படுகிறது.

தொழுகையானது அடியானுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஒளியாக அமையும் என்பதால்,

தொழுகையைப் கடைப்பிடித்து பேணுவதன் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது

தர்மம் ஈமானின் -நம்பிக்கையின் உண்மை நிலையை விளக்கும் ஆதாரமாகும்.

அல்குர்ஆனை உண்மைப்படுத்தி அதில் உள்ள போதனைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் இந்த ஹதீஸில் குறிப்பிடபட்பட்டிருக்கிறது. ஏனெனில் அல்குர்ஆனை அணுகும் விதத்தில்தான் உமக்கு அது சாதகமாகவோ,எதிரானதாகவோ அமையும்.

மனதை (வழிப்பாட்டில்) நன்மையான காரியத்தில் ஈடுபத்தவில்லையெனில் உம்மை பாவத்தில் ஆழ்த்தி விடும்.

ஓவ்வொரு மனிதனும் தன்னை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு) நரகத்தைவிட்டு விடுவித்துக்கொள்ளவும் அல்லது பாவகரியத்தில் ஈடுபட்டு பெரும் நாசத்தை அடையவும் இவ்வுலகில் ஏதோ வகையில் செயல்படுதல் வேண்டும்.

பொறுமைக்கு சிரமத்தை தாங்குதல், நன்மையை எதிர்பார்த்தல் எனும் பண்புகள் தேவையாகும். பொறுமையை கடைப்பிடிப்பதில் சிரமம் உள்ளது.

التصنيفات

ஈமானின் கிளைகள், திக்ரின் பயன்கள், உளப்பரிசுத்தம் செய்தல், வுழூவின் சிறப்பு, தொழுகையின் சிறப்பு