நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில், அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த…

நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில், அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவாயாக.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) கூறுகின்றார் : நான் மூல நோயினால் பீடிக்கப்பட்டிருந்தேன். தொழுகை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள்: "நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில், அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவாயாக" என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

மூல நோய், அல்லது நிற்கும் போது சிரமம் உள்ளவர்கள் தொழும் முறையை இந்நபிமொழி தெளிவுபடுத்துகின்றது. சக்தி இல்லாவிட்டாலே தவிர நின்று தொழுவதுதான் அடிப்படை என்பதை நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். அவ்வாறு முடியாவிட்டால் உட்கார்ந்து தொழ வேண்டும், அதுவும் முடியாவிட்டால் சாய்ந்து தொழ முடியும்.

فوائد الحديث

நோயாளியின் கடமையான தொழுகையின் படித்தரங்களைப் பேணுவது அவசியமாகும். எனவே முடியுமான பட்சத்தில் நின்று தொழ வேண்டும், ஏனெனில் இது தொழுகையின் பிராதன தூண்களில் ஒன்றாகும். ஆகவே தடி, அல்லது சுவர் போன்ற ஏதாவது ஒன்றில் ஊன்றிக் கொண்டாவது நின்று தொழ வேண்டும்.

நிற்க முடியாவிட்டால், அல்லது நிற்பது சிரமமானால் ஒன்றில் சாய்ந்து கொண்டாவது உட்கார்ந்து தொழுவது அவசியமாகும். முடியுமானளவு ருகூஃ, ஸுஜூதுகளை செய்ய வேண்டும். உட்காரவும் முடியாவிட்டால் அல்லது சிரமமானால் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு தொழ வேண்டும். வலது பக்கம் சிறந்தது, கிப்லாத் திசையை நோக்கி அன்னாந்து படுத்துக் கொண்டு தொழுதாலும் கூடும். அதுவும் முடியாவிட்டால் தலையினால் சைக்கினை செய்து தொழ வேண்டும். இரு ருகூன்களையும் வேறு பிரித்துக் காட்டுவதற்காக ஸுஜூதுக்கு செய்யும் சைக்கினை ருகூஃவுக்கு செய்யும் சைக்கினையை விட சற்று தாழ்வாக இருக்க வேண்டும். ஏனெனில் ஸுஜூது ருகூஃவை விட தாழ்வானதாகும்.

ஒரு நிலையிலிருந்து, அதை விடத்தாழ்ந்த நிலைக்குச் செய்வதானால் முடியாத பட்சத்தில் அல்லது முதல் நிலையில் சிரமம் இருந்தால் மாத்திரம்தான் செல்ல முடியும். ஏனெனில் இங்கு ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்குச் செல்வது இயலாமை என்ற நிபந்தனையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

உட்கார்ந்து தொழ அனுமதிக்கும் சிரமத்தின் வரையறையானது உள்ளச்சத்தைப் போக்குமளவு சிரமம் ஏற்படுவதாகும், ஏனெனில் உள்ளச்சம்தான் தொழுகையின் பாரிய இலக்காகும்.

உட்கார்ந்து தொழ அனுமதிக்கக் கூடிய காரணிகள் பல உள்ளன, நோய்க்கு மாத்திரம் குறிப்பானதல்ல, நின்று தொழ முடியாதளவு குட்டையான கூரையமைப்பு, தேவையேற்படும் போது கப்பல், விமானம், இதர வாகனத்தில் தொழுதல், நிற்க சக்தியில்லாமல் இருத்தல் போன்ற இவையனைத்தும் உட்கார்ந்து தொழ அனுமதிக்கும் காரணிகளாகும்.

சுய நினைவு இருக்கும் காலமெல்லாம் தொழுகை தளர மாட்டாது. எனவே ஒரு நோயாளி தனது தலையினால் சைக்கினை செய்ய முடியாவிட்டால் கண்ணினால் சைக்கினை செய்ய வேண்டும். ருகூஃவில் கண்ணை சற்று தாழ்த்த வேண்டும், ஸுஜூதில் அதை விட சற்று அதிகமாக தாழ்த்த வேண்டும். நாவினால் ஓத முடியுமானால் ஓத வேண்டும், முடியாவிட்டால் மனதினால் ஓத வேண்டும். கண்ணினால் சைக்கினை செய்து தொழ முடியாவிட்டால் மனதினால் தொழ வேண்டும்.

இந்நபிமொழியின் பொது வார்த்தையின் மூலம் எந்தக் கோலத்திலும் உட்கார முடியும் என்பதை விளங்கலாம், அது ஒருமித்த கருத்தாகும், எது சிறந்தது என்பதிலேயே கருத்து வேறுபாடுள்ளது. நிற்க வேண்டிய சந்தர்பத்திலும், ருகூஃவிலிருந்து எழும் சந்தர்ப்பத்திலும் சப்பாணி கோலத்திலும், உட்காரும் சந்தர்ப்பத்தில் இப்திராஷ் (வலது காலை நாட்டி, இடது காலை விரித்து உட்கார்தல்) அமைப்பிலும் உட்கார வேண்டும்.

அல்லாஹ்வின் கட்டளைகள் சக்திக்கும், ஆற்றலுக்கும் ஏற்றவாறே மேற்கொள்ளப்படும், அல்லாஹ் எந்தவொரு ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி சிரமப் படுத்துவதில்லை.

இந்த இஸ்லாமிய சட்டத்தில் உள்ள நெகிழ்வுத்தன்மை, இலகு போன்றன தெளிவாகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : "இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் வைக்கவில்லை" (ஹஜ் : 78), மேலும் கூறுகின்றான் : "அல்லாஹ் உங்களுக்கு இலகுபடுத்தவே விரும்புகின்றான்" (நிஸா : 28), இவ்வாறுதான் இஸ்லாமிய சட்டங்கள் உள்ளன. தன் அடியார்கள் மீதான அல்லாஹ்வின் கருணை விசாலமானதாகும்.

முன்னர் கூறப்பட்டதெல்லாம் கடமையான தொழுகையின் சட்டமாகும். ஸுன்னத்தான தொழுகைகளை தகுந்த காரணமின்றியும் உட்கார்ந்து தொழலாம், இருப்பினும் காரணத்துடன் இருந்தால் அவருக்கு முழுமையான கூலி கிடைக்கும். காரணமின்றி அவ்வாறு தொழுதால் நின்று தொழுதவருடைய கூலியில் பாதியே கிடைக்குமென நபிமொழிகளில் உள்ளது.

التصنيفات

அசாதாரண நிலையிலுள்ளோரின் நோன்பு