யார் வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுகின்றாரோ, அவர் எங்களை விட்டும் - அல்லது எமது பள்ளிவாசலை விட்டும்…

யார் வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுகின்றாரோ, அவர் எங்களை விட்டும் - அல்லது எமது பள்ளிவாசலை விட்டும் - ஒதுங்கி, தனது வீட்டில் இருந்துகொள்ளட்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார் வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுகின்றாரோ, அவர் எங்களை விட்டும் - அல்லது எமது பள்ளிவாசலை விட்டும் - ஒதுங்கி, தனது வீட்டில் இருந்துகொள்ளட்டும். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிடவில்லை)” என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் போன்றவற்றைச் சாப்பிட்டவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதை நபியவர்கள் தடுக்கின்றார்கள். ஏனெனில், அவர்கள் தமது துர்வாடையினால், ஜமாஅத் தொழுகைக்கு வரும் சகோதரர்களுக்குத் தொல்லையை ஏற்படுத்துகின்றார்கள். இது (தடையைக் காட்டாத) தூய்மைப்படுத்தல் சார்ந்த அமைப்பில், பள்ளிவாசலுக்கு வருவதைத் தான் தடுக்கின்றதே ஒழிய, அவற்றைச் சாப்பிடுவதை அல்ல. ஏனெனில். அவை அனுமதிக்கப்பட்ட உணவுகளாகும். காய்கறிகள் உள்ள ஒரு சட்டி நபியவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அதில் ஒரு துர்வாடையை நபியவர்கள் உணர்ந்த போது, அதில் இருப்பவை பற்றி நபியவர்களுக்குக் கூறப்பட்டது. உடனே நபியவர்கள் சாப்பிடாமல் தவிர்ந்து கொண்டார்கள். பின்பு நபியவர்கள் தனது ஒரு நபித்தோழர் அதனைச் சாப்பிடுவதற்காக, அவரிடம் கொடுத்தார்கள். அவரும் நபியவர்களைப் பின்பற்றி, அதைச் சாப்பிட வெறுத்தார். அதை நபியவர்கள் கண்டவுடன், 'நீங்கள் சாப்பிடுங்கள். நான் மலக்குகளுடன் உரையாடுகின்றேன்.' என்று கூறினார்கள். துர்வாடைகளால் மனிதர்கள் தொந்தரவுக்குள்ளாவது போன்று, மலக்குகளும் உள்ளாவதாக நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள்.

فوائد الحديث

வெள்ளைப் பூண்டு, வெங்காயம், லீக்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டவர்கள் பள்ளிவாசலுக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், சிகரட், புகையிலை போன்ற, தொழுகையாளிகளுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் துர்வாடையுடைய அனைத்தும் சேர்க்கப்படும்.

தடுக்கப்படுவதற்கான காரணம், வாடையே! எனவே, நன்று சமைப்பதன் மூலமாகவோ, அல்லது வேறு வழிகளாலோ அது நீங்கிவிடுமென்றால் அது வெறுக்கப்படமாட்டாது.

தொழுகைக்காகக் கட்டாயம் பள்ளிவாசலுக்கு வரவேண்டியவர்கள் (பள்ளிவசாலின் ஜமாஅத் தப்பாமல் இருக்கவேண்டும் என்பதனால்) இதை சாப்பிடுவது வெறுக்கப்படுகின்றது. ஜமாஅத்துக்கு வரவேண்டும் என்ற கடமையை நீக்குவதற்காக வேண்டி தந்திரமாக யாராவது சாப்பிட்டால், அது ஹராமாகும்.

நபியவர்கள் வெள்ளைப் பூண்டு போன்றவற்றைச் சாப்பிடாமல் இருந்தது அவை ஹராம் என்பதற்காக அல்ல. மாறாக, நபியவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் உரையாடுவதனாலேயே!

நபியவர்களின் அழகான கற்பித்தல் முறை. அதாவது, கேட்பவர் காரணங்களை அறிந்துத் திருப்திப்படும் விதத்தில், காரணங்களுடனேயே சட்டங்களைக் கூறுகின்றார்கள்.

காழீ இயாழ் அவர்கள் கூறுகின்றார்கள் : பள்ளிவாசல் அல்லாமல், தொழுகைக்காக ஒன்று கூடும் இடங்களாகிய, பெருநாள் திடல், ஜனாஸாத் தொழும் இடம் போன்ற, வணக்கங்களுக்காக ஒன்று கூடும் இடங்களையும் இதனுடன் உலமாக்கள் இணைத்துள்ளார்கள். கல்வி, திக்ர், வலீமா போன்றவற்றிற்காக ஒன்று கூடும் இடங்களும் இவ்வாறுதான். சந்தைகள் போன்றவை இவற்றுடன் இணைக்கப்படமாட்டாது.

அறிஞர்கள் கூறுகின்றார்கள் : வெள்ளைப் பூண்டு போன்றவற்றைச் சாப்பிடுபவர்கள், - பள்ளிவாசலில் யாரும் இல்லாவிட்டாலும் - அதில் நுழைவது தடுக்கப்படும் என்பதற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஏனெனில், அது மலக்குமார்கள் இருக்கும் இடமாகும். மேலும், இந்த ஹதீஸும் பொதுவாகவே வந்துள்ளது.

التصنيفات

கூட்டுத் தொழுகையின் சிறப்பும் சட்டங்களும்