சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்த பின் அல்லாஹ் தஆலா, 'நான் உங்களுக்கு மேலதிகமாக ஒரு விடயத்தைத் தருவதை…

சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்த பின் அல்லாஹ் தஆலா, 'நான் உங்களுக்கு மேலதிகமாக ஒரு விடயத்தைத் தருவதை விரும்புகின்றீர்களா?' என்று கேட்பான்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்த பின் அல்லாஹ் தஆலா, 'நான் உங்களுக்கு மேலதிகமாக ஒரு விடயத்தைத் தருவதை விரும்புகின்றீர்களா?' என்று கேட்பான். அப்போது அவர்கள், 'நீ எங்களது முகங்களை பிரகாசமாக்கவில்லையா? எங்களை நரகில் இருந்து பாதுகாத்து, சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?' என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். அவர்களுக்கு அல்லாஹ்வைப் பார்ப்பதை விட, விருப்பமான வேறொன்றும் வழங்கப்பட்டிருக்கமாட்டாது.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்துவிட்டால், அல்லாஹ் பின்வருமாறு கூறுவதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் உங்களுக்கு ஏதாவது அதிகமாகத் தருவதை விரும்புகின்றீர்களா? அப்போது சுவனவாதிகள் அனைவரும், 'நீ எங்கள் முகங்களைப் பிரகாசமாக்கவில்லையா? எங்களை நரகில் இருந்து பாதுகாத்து, சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?' என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். அவனது திரை ஒளியாகும். சுவனவாதிகளுக்கு தமது ரப்பைப் பார்ப்பதை விட வேறு விருப்பமான ஒன்றுமே வழங்கப்பட்டிருக்கமாட்டாது.

فوائد الحديث

சுவனவாதிகளுக்காக திரை நீக்கப்பட்டதும் அவர்கள் தமது ரப்பைப் பார்ப்பார்கள். ஆனால், நிராகரிப்பாளர்கள் அந்தப் பாக்கியத்தை விட்டும் தடுக்கப்படுவார்கள்.

சுவனத்தின் இன்பங்களில் மிக மகத்தானது, முஃமின்கள் தமது ரப்பைப் பார்ப்பதாகும்.

சுவனவாதிகள் அனைவரும் - அவர்களது அந்தஸ்த்துக்கள் வேறுபட்டாலும் - தமது ரப்பைப் பார்ப்பார்கள்.

அல்லாஹ் விசுவாசிகளை சுவனத்தில் நுழையச் செய்து, அவர்களுக்குப் பேருபகாரம் புரிந்துள்ளமை.

நல் அமல்களைக் கொண்டும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்படுவது கொண்டும் சுவனத்தை நோக்கி விரைவதன் முக்கியத்துவம்.

التصنيفات

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்