ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார்.…

ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது.

உமர் (ரலி) கூறினார்கள் : ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று நபி (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் சேர்த்தும் இரு கைகளைக் தனது கால்களின் மீது வைத்தும் அமர்ந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் 'இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறை வேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவியது குறித்தும் அவரே உண்மைப்படுத்தியது குறித்தும் ஆச்சரியம் கொண்டோம். பின்னரவர் ‘ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள்’ என்றார். 'அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்றும் நம்புவதுமாகும்” என்பதாக நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். தொடர்ந்து அவர் ‘இஹ்ஸான் (உளத்தூய்மை) பற்றி எனக்குச் சொல்லுங்கள்’ என்றார். 'நீங்கள் அல்லாஹ்வை பார்க்காத போதும் அவனை நேரில் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்” எனச் சொன்னார்கள். பின்னர் அவர் ‘எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்” என்றார்கள். (அதாவது அல்லாஹ் மாத்திரமே அதன் நேரத்தை அறிவான்). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள் சொன்னதாவது, 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்’.பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்” என்றேன் நான். நபி (ஸல்) அவர்கள், அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்” என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும் போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் இனந்தெரியாத ஒரு மனிதரின் தோற்றத்தில் அவர்கள் முன்னிலையில் வந்து நபியவர்களுக்கு முன்னால் கற்கும் ஒரு மாணவன் உட்கா்வதைப் போன்று உட்கார்ந்து, இஸ்லாத்தைப் பற்றி வினவினார்கள். நபியவர்கள், இரு சாட்சியங்கள், தொழுகையைப் பேணுதல், தகுதியானவர்களுக்கு ஸகாத் வழங்குதல், உண்மையான எண்ணத்துடன் ரமழானில் நோன்பு நோற்றல், வசதியுள்ளவர்கள் ஹஜ் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய இஸ்லாத்தின் தூண்களைக் கூறினார்கள். அதனைக் கேட்டதும் வந்தவர் உண்மைதான் எனக் கூறினார். அறியாத ஒருவரின் தோரணையில் கேள்வி கேட்டுவிட்டு, அவரே உண்மைப் படுத்துவதைப் பார்த்து தோழர்கள் வியந்தார்கள். மீண்டும் ஈமானைப் பற்றி வந்தவர் வினவினார். குறைகளற்ற பரிபூரண பண்புகளுடையவன், படைத்து, வாழ்வாதாரமளிப்பவன் அல்லாஹ்தான், அவன் படைத்த வானவர்கள் கண்ணியமான அடியார்கள், அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்யாமல், ஏவப்பட்டதைச் செய்வார்கள், இறைத் தூதர்களுக்கு அருளப்பட்ட வேதங்களை நம்புதல், அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்திவைக்கும் இறைத்தூதர்களை நம்புதல், மனிதன் மரணத்தின் பின் மீள் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவான் என்ற விடயங்களை உள்ளடக்கிய ஈமானின் ஆறு அம்சங்களையும் நபியவர்கள் கூறினார்கள். பின் இஹ்ஸானைப் பற்றி வந்தவர் கேட்க அல்லாஹ்வை நேரடியாகப் பார்ப்பதைப் போன்று அவனை வணங்குதல், முடியாவிட்டால் அவன் அனைத்தையும் அறிந்து கொண்டிருக்கிறான் என்ற அச்சத்தில் வணங்குவதாகும் எனக் கூறினார்கள். பின் மறுமை பற்றிய அறிவு படைப்பினங்களில் யாரிடமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு, அதன் அடையாளங்களில் அடிமைப் பெண்களும் அவர்களது பிள்ளைகளும் அதிகரித்தல், அல்லது பிள்ளைகள் தமது தாய்மார்களை அடிமைகளைப் போன்று நடத்துவார்கள், ஆடு மேய்க்கக் கூடிய வறியவர்களுக்கு இறுதிக் காலங்களில் வசதி ஏற்பட்டு மாடமாளிகைகளைக் கட்டுவதில் போட்டிபோட்டு, பெருமைப் பட்டுக்கொள்வார்கள் என நபியவர்கள் தெளிவு படுத்தினார்கள். மேற்கண்ட அனைத்து கேள்வி - பதில்களும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்தூய மார்க்கத்தை எமக்குப் போதிப்பதற்காகவே கேட்க்கப்பட்டது, அதனால்தான் நபியவர்கள் இறுதியில் "இது ஜிப்ரீல், உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்பிக்க வந்தார்" எனக் கூறினார்கள்.

فوائد الحديث

தன்னைத் தனித்துக் காட்டி, தோழர்களுக்கு மேலாக நினைக்காமல் அவர்களுடன் சரி சமமாக உட்கார்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் அழகிய குணம் தெளிவாகின்றது.

பிரமுகர்களிடம் செல்லும் போது ஆடை, தோற்றங்களை அலங்கரிப்பது, சுத்தமாகச் செல்வது விரும்பத்தக்கது. ஏனெனில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மக்களுக்கு சொல், செயல் அனைத்தையுமே கற்பிக்க வந்தார்கள்.

வானவர்களுக்கு தமது சுய தோற்றமின்றி வேறு தோற்றங்களுக்கும் மாறலாம்.

கேள்வி கேட்பவர் தடையின்றி அச்சமின்றி கேட்பதற்காக அவருடன் மென்மையாக நடந்து, நெருக்கமாக உட்கார வைத்தல்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களிடமிருந்து கற்பதற்காக ஒழுக்கமான முறையில் அன்னாருக்கு முன்னால் உட்கார்ந்ததைப் போன்று ஆசிரியருடன் ஒழுக்கமாக நடந்து கொள்ளல்.

சிலேடையாகப் பேசுவது ஆகுமானதாகும், ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மதே என அழைத்தார்கள், இது கிராம வாசிகளின் பேச்சு வழக்காகும், தன்னை ஒரு கிராம வாசியாகக் காட்டிக் கொள்வதற்காகவே இவ்வாறு சிலேடையாகப் பேசினார்கள். அவ்வாறில்லாவிடில் நற்குணங்களுடைய நகர வாசிகள் நபியவர்களை இவ்வாறு பெயர்கூறி அழைக்க மாட்டார்கள்.

இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் ஆகியவற்றுக்கிடையிலான தராதரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஈமானின் ஆறு அடிப்படைகளை நம்புவது மறைவானவற்றை நம்புவதில் உள்ளடங்குகின்றது.

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்தாகும், ஈமானின் அடிப்படைகள் ஆறாகும்.

இஸ்லாம், ஈமான் ஆகிய இரண்டும் ஒரே இடத்தில் கூறப்படும் போது வெளிப்படையான விடயங்களை இஸ்லாம் எனவும், உள்ரங்கமான நம்பிக்கை சார்ந்த விடயங்களை ஈமான் எனவும் விளக்கமளிக்கப்படும்.

இஹ்ஸான் தான் மிக உயர்ந்த தரத்திலுள்ளதாகும்.

கேள்வி கேட்பவரில் அடிப்படை அறியாமையாகும், அதுதான் கேள்விக்குத் தூண்டுகின்றது.

ஒன்றைக் கூறும் போது மிக முக்கியமானதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தைப் பற்றி விளக்கும் போது இரு சாட்சியங்களைக் கொண்டும், ஈமானைப் பற்றி விளக்கும் போது அல்லாஹ்வை நம்புவதைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அருகிலிருந்து செவிமடுப்போருக்குக் கற்பிப்பதற்காக கேள்வி கேட்பவர் அறிந்த விடயங்களைக் கூட அறிஞர்களிடம் கேட்கலாம்.

தனக்குத் தெரியாத விடயங்களில் "அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்" எனக் கூற வேண்டும்.

மறுமை எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு அல்லாஹ் மாத்திரம் அறிந்து வைத்துள்ள ஒன்றாகும்.

மறுமையின் சில அறிகுறிகள் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

التصنيفات

இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை