எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை…

எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்

அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : உயர்ந்தோனாகிய கண்ணியமிக்க அல்லாஹ்விடமிருந்து அறியப் பெற்றதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர். எனது அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன். எனது அடியார்களே, நான் உணவளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்பீர்கள். ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன். எனது அடியார்களே! நான் ஆடை அளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள். நானோ பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. இன்னும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்கள், ஜின்கள் ஆகிய நீங்கள் அனைவரும் என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும் இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள் மனிதர்கள் ஜின்கள் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது. என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டகவும், அவ்வாறு நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஓர் ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் குறையும் அளவிற்குக் கூட குறைத்து விடுவதில்லை. எனது அடியார்களே! இவைதான் உங்களுடைய செயல்கள். அவற்றைக் கொண்டே நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி தருகின்றேன். ஆகவே உங்களில் நலவைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ்வைப் புகழட்டும். நலவு அல்லாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற வேண்டாம்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அல்லாஹ் அநியாயம் இழைப்பதை தன்மீது ஹராமாக்கிக் கொண்டதாகவும், அதனை தனது படைப்பினங்களுக்கு மத்தியிலும் ஹராமாக்கியுள்ளதாகவும் தெளிவுபடுத்துகிறார்கள். ஆகவே ஒருவர் மற்றவருக்கு அநியாயம் இழைக்க வேண்டாம். அல்லாஹ்வின் வழிகாட்டலையும் அதற்கான வாய்ப்பையும் பெறாத அடியார்கள் அனைவரும் சத்தியப்பாதையைவிட்டும் தடம்புரண்டவர்களாக உள்ளனர். யார் அல்லாஹ்விடம் நேரான வழியை வேண்டுகிறானோ அவனுக்கு அல்லாஹ் நேரான பாதையை காட்டி அதற்கான வாய்ப்பையும் அளிக்கிறான். அடியார்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அல்லாஹ்விடம் தேவையுடயவர் களாக உள்ளனர் . எனவே யார் அல்லஹ்விடம் தனது தேவையை நிறைவேற்றித்தருமாறு கோருகிறனோ அவனின் தேவையை நிறைவேற்றி அவனை தன்னிறைவுள்ளவனாக மாற்றுகிறான். அவர்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறார்கள். அடியான் தனது இரட்சகனான அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அதனை அல்லாஹ் மறைத்து மன்னித்து விடுகிறான். அடியார்கள் அனைவரும் (தமது சொல், செயல்களால்) அல்லாஹ்வுக்கு நலவோ, கெடுதியோ செய்ய அவர்களால் ஒரு போதும் முடியாது. அவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு மிக அஞ்சிய ஒருவருடைய உள்ளத்தின் பெயரில் இருந்தாலும், அவர்களுடைய இறையச்சம் அல்லாஹ்வின் ஆட்சியதிகாரத்தில் சிறிதளவையேனும் அதிகரிக்க செய்வதில்லை. அவர்கள் அனைவரும் மிகமோசமான பாவியுடைய உள்ளத்தை கொண்டிருந்தாலும் அவர்களுடைய பாவங்கள் அவனது ஆட்சியதிகாரத்தில் சிறிதளவையேனும் குறைக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் எல்லா நிலமைகளிலும், காலங்களிலும், இடங்களிலும் அவன்பால் தேவையுடைய வறியவர்களாக உள்ளனர். அல்லாஹ்வே எவ்விதத் தேவையுமற்றவனாவான்-அவன் தூய்மையானவன்- ஜின் மற்றும் மனித இனம் அனைவரும் அவர்களில் முன்பிருந்தோரும் தற்போது இருப்போரும் ஓரிடத்தில் ஒன்று கூடி, ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு, அவர்கள் கேட்ட அனைத்தையும் அவன் கொடுத்தாலும் அவனிடத்தில உள்ளவற்றில் சிறிதளவேனும் குறைய மாட்டாது. கடலுக்குள் இடப்பட்டு வெளியே எடுத்த ஊசியைப் போல், இதன் மூலம் கடலில் எதுவும் குறைந்து விடுவதில்லை. இதுபோல்தான் அல்லாஹ் தன்னிறைவானவன், எதுவும் தேவையற்றவன். அல்லாஹ் அடியார்களின் அனைத்து செயல்களையும் பாதுகாத்து, அவர்களது நன்மை, தீமைகளைக் கணக்கிட்டு வைக்கின்றான். பின் மறுமையில் அதனடிப்படையில் கூலி வழங்குகிறான். தனது செயல்களுக்குரிய கூலியை நன்மையாக கண்டுகொண்டவர் (சுவனத்தைப் பெற்றுக் கொண்டவர்) அல்லாஹ் அவனுக்கு வழிப்படும் நற்பாக்கியத்தை அளித்தமைக்காக அவனைப் புகழட்டும், இவையல்லாத தண்டனைகளைக் கூலியாப் பெற்றவர் தன்னை நஷ்டத்தின் பால் தூண்டிய தனது ஆன்மாவையே நொந்து கொள்ளட்டும்.

فوائد الحديث

இந்த ஹதீஸ் அல்லாஹ் கூறியதாத நபி ஸல்லல்லாஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியாகும். இவ்வாறான ஹதீஸ்கள் 'ஹதீஸ் குத்ஸீ' (புனிதமிக்க நபிமொழி), 'ஹதீஸ் இலாஹீ' (தெய்வீக நபிமொழி) எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. இவ்வாறான ஹதீஸ்களின் வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும். என்றாலும் அல்குர்னுக்குரிய தனித்துவங்கள் இதற்குக் கிடையாது. அதாவது அல்குர்ஆன் பெற்றுள்ள தனித்துவங்களான ஓதுவது வணக்கம், ஓதுவதற்கு வுழு செய்து கொள்ளுதல் (விரும்பத்தக்கது), சவால் விடுதல், அற்புதம் போன்றவை இவ்வகையான ஹதீஸ்களுக்கு கிடையாது.

அடியார்கள் பெற்றுக் கொள்ளும் அறிவு, நேர்வழி அனைத்தும் அல்லாஹ் கற்பித்து, வழிகாட்டியதன் மூலமே பெறுகின்றனர்.

ஒரு அடியானுக்கு என்ன நன்மை ஏற்படுகிறதோ அது எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் உண்டாகிறது, அவனுக்கு கிடைக்கின்ற எந்தக் கெடுதியாயினும் அவனது மனோ இச்சையினாலாகும்.

எவர் நன்மை செய்கிறாரோ, அது இறைவனின் அருளால் கிடைக்கும், அவருக்குரிய வெகுமதி இறைவனின் அருட்கொடை, புகழ் அவருக்குரியது, தீமை செய்பவர் தன்னைத் தவிர வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

التصنيفات

இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை, இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம்