'நீ இவ்வுலகில் ஒரு பரதேசியைப் போன்று, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள்.'

'நீ இவ்வுலகில் ஒரு பரதேசியைப் போன்று, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள்.'

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் எனது தோல்புயத்தைப் பிடித்து, இவ்வாறு கூறினார்கள் : 'நீ இவ்வுலகில் ஒரு பரதேசியைப் போன்று, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள்.' இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள் : 'நீ மாலையை அடைந்தால், காலையை அடைவதாக எதிர்பார்க்காதே! காலையை அடைந்தால், மாலையை அடைவதாக எதிர்பார்க்காதே! உனது ஆரோக்கியத்தில் இருந்து, நோய்க்காகவும், உனது வாழ்வில் இருந்து, மரணத்திற்காகவும் எடுத்துக்கொள்!'

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

நபியவர்கள் தனது தோல்புயத்தைப் பிடித்து இவ்வாறு கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நீ, இவ்வுலகில், ஒதுங்குவதற்கு வீடோ, ஆறுதலளிக்கும் நண்பனோ இல்லாத ஓர் ஊருக்கு வந்து, படைத்தவனை விட்டும் திசைதிருப்பும் காரணிகளான குடும்பம், உறவுகள் மற்றும் தொடர்புகள் போன்ற அனைத்தையும் விட்டு நீங்கி இருக்கும் ஒரு பரதேசியைப் போன்று இருந்துகொள்! அல்லது, அந்தப் பரதேசியை விட அதிகமாக, தனது வாழ்விடத்தைத் தேடி, பாதைகளைக் கடந்து செல்லும், ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள். ஏனெனில் சிலவேளை ஒரு பரதேசி ஒரு வேற்றூரில் வசித்து அங்கு தங்கிவிடலாம். ஆனால் தனது ஊரை நாடிச் செல்லும் வழிப்போக்கன் அவ்வாறல்ல. அவன் நீண்ட சுமைகளை சுமக்காமலும், தரித்துநிற்காமலும், தனது ஊரை அடையும் ஆர்வத்திலேயே இருப்பான். ஒரு பயணிக்கு, எவ்வாறு தனது பயண குறிக்கோளை அடைவதற்கு அவசியமானவற்றைத் தவிர எதுவும் தேவையில்லையோ, அவ்வாறு தான் ஒரு முஃமினுக்கு, தனது குறிக்கோளை அடைவதற்கு உதவியாக இருப்பவற்றை விட எதுவும் அவசியமாக இருக்காது. இப்னு உமர் (ரலி) அவர்கள் இந்த உபதேசத்தை நடைமுறைப்படுத்தினார்கள். அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் : 'நீ காலையை அடைந்தால், மாலையை அடைவதாக எதிர்பார்க்காதே! உன்னை, மண்ணறைகளில் வாழும் ஒருவனாகவே நீ எண்ணிக்கொள்! ஏனெனில், வாழ்க்கை என்பது, ஆரோக்கியம் மற்றும் நோய் ஆகிய இரண்டையும் கொண்டதுவே. எனவே, உனது ஆரோக்கிய நாட்களை, நோய்க்காலத்திற்காக வணக்கங்களைச் செய்து பயன்படுத்திக்கொள். நல்லமல்களுக்குத் தடையாக நோய்கள் ஏற்பட முன்னர், ஆரோக்கிய நாட்களை அவற்றிற்காகப் பயன்படுத்திக்கொள். உனது இவ்வுலக வாழ்வைப் பயன்படுத்தி, மறுமைக்குப் பயனளிப்பவற்றை அவற்றுள் ஒன்று சேர்த்துக்கொள்

فوائد الحديث

ஒரு ஆசிரியர், மாணவருக்கு விழிப்பூட்டவும், இரக்கத்தைக் காட்டவும் அவரது தோல்புயத்தின் மீது தனது உள்ளங்கையை வைத்தல்.

உபதேசம், வழிகாட்டல் என்பவற்றை வினவாதவர்களிடமும் அவற்றை முன்வைத்தல்.

'நீ இவ்வுலகில் ஒரு பரதேசியைப் போன்று, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள்.' என்று திருப்திப்படுத்தும் உதாரணங்களைக் குறிப்பிட்டு நபியவர்கள் அழகான முறையில் கற்பித்துள்ளமை.

அல்லாஹ்வை நோக்கிய பயணத்தில் மக்களுக்கிடையில் உள்ள வேறுபாடு. 'வழிப்போக்கன்' என்பது, பற்றற்ற தன்மையில், 'பரதேசி' என்பதை விட உயர்ந்ததாகும்.

மேலெண்ணங்களைக் குறைத்து, மறுமைக்காக தயாராதல் என்பதைத் தெளிவுபடுத்தல்.

வாழ்வாதாரத்தைப் புறக்கணிக்குமாறும், உலக இன்பங்களைத் தடைசெய்வதாகவும் இந்த ஹதீஸ் கூறவில்லை. மாறாக, அவற்றில் சொற்பமானவற்றையே எடுத்துக் கொண்டு, பற்றற்ற நிலையில் வாழவே தூண்டுகின்றது.

சக்தியற்ற நிலை ஏற்பட முன்னர், நோய் அல்லது மரணம் ஆகிய தடைகள் ஏற்பட முன்னர் விரைந்து நல் அமல்களில் ஈடுபடல்.

இப்னு உமர் (ரலி) அவர்களது சிறப்பு. அதாவது. நபயிவர்களின் இந்த உபதேசத்தினால் அவர்கள் மாற்றமடைந்துள்ளார்கள்.

விசுவாசிகளின் வாழ்விடம் சுவனம் தான். எனவே, உலகில் அவர்கள் பரதேசிகளே. அவர்கள் மறுமைக்காக பயணித்துக்கொண்டிருப்பவர்கள். அதனால், வேற்றூரில் இருக்கும் எந்த அம்சங்களிலும் தமது உள்ளத்தைப் பறிகொடுக்க மாட்டார்கள். மாறாக, அவர்களது உள்ளம் மீளவேண்டிய அவர்களது வாழ்விடத்தின் சிந்தனையிலேயே இருக்கும். இவ்வுலகில் அவர்கள் தங்கியிருப்பது, தமது தேவைகளை நிறைவேற்றி, தமது வாழ்விடத்தை நோக்கி மீள்வதற்காகத் தயாராகவே!

التصنيفات

உளப்பரிசுத்தம் செய்தல்