'அவரைக் கொலைசெய்யாதீர். அவ்வாறு நீங்கள் அவரைக் கொலைசெய்தால், கொலைசெய்ய முன்னர் நீர் இருந்த தரத்தில் அவரும்,…

'அவரைக் கொலைசெய்யாதீர். அவ்வாறு நீங்கள் அவரைக் கொலைசெய்தால், கொலைசெய்ய முன்னர் நீர் இருந்த தரத்தில் அவரும், அவர் கூறிய அவ்வார்த்தையைக் கூற முன்னர் அவர் இருந்த தரத்தில் நீங்களும் இருப்பீர்கள்.' என்று கூறினார்கள்

மிக்தாத் இப்னு அம்ர் அல்கின்தீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான் நபியவர்களிடம் இவ்வாறு கேட்டேன் : நான் நிராகரிப்பாளர்களில் ஒருவரைச் சந்தித்து, நாமிருவரும் சண்டையிட்டு, அவன் எனது ஒரு கையை வாளால் வெட்டிவிட்டான். பின்பு அவன் ஒரு மரத்தில் ஏறி தன்னைக் காத்துக்கொண்டு, 'நான் இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன்' என்று கூறுகின்றான். அல்லாஹ்வின் தூதரே! அவன் இவ்வாறு கூறிய பின்னர் நான் அவனைக் கொலை செய்யலாமா?' அதற்கு நபியவர்கள், 'அவரைக் கொலைசெய்யாதீர்கள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது ஒரு கையை வெட்டினான். வெட்டிய பின்பு தான் அவ்வாறு கூறினான்.' என்று கேட்டபோது, 'அவரைக் கொலைசெய்யாதீர். அவ்வாறு நீங்கள் அவரைக் கொலைசெய்தால், கொலைசெய்ய முன்னர் நீர் இருந்த தரத்தில் அவரும், அவர் கூறிய அவ்வார்த்தையைக் கூற முன்னர் அவர் இருந்த தரத்தில் நீங்களும் இருப்பீர்கள்.' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் இவ்வாறு கேட்கின்றார்கள், அதாவது, அவர் யுத்தத்தில் ஒரு நிராகரிப்பாளரைச் சந்தித்து, வாளால் யுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, அந்த நிராகரிப்பாளர் இவரது ஒரு கையை வாளால் வெட்டிவிட்டு, விரண்டோடி ஒரு மரத்தின் மீதேறி ஒதுங்கிக்கொண்டு, 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறினால், இவர் தனது கையை வெட்டிய காரணத்தினால் இவரைக் கொலை செய்ய முடியுமா? என்று கேட்கின்றார்கள். அதற்கு நபியவர்கள் 'கொலைசெய்யாதீர்கள்' என்று கூறிவிடுகின்றார்கள். அப்போது அந்த நபித்தோழர், 'அல்லாஹ்வுடைய தூதரே! இவர் எனது ஒரு கையை வெட்டியுள்ளார். அப்படியிருந்தும் நான் அவரைக் கொலைசெய்யக் கூடாதா?' என்று கேட்கின்றார்கள். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: அவரைக் கொலை செய்யாதீர்கள். ஏனெனில், அவர் இப்போது உயிர் பாதுகாக்கப்பட்ட ஒருவராக மாறிவிட்டார். எனவே, அவர் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் நீ அவரைக் கொலை செய்தால், அவர் உன்னைப் போல, இஸ்லாத்தை ஏற்று உயிரைப் பாதுகாத்துக் கொண்டவர். நீ அவரைக் கொலைசெய்த காரணத்தினால், பலிக்குபலி என்ற அடிப்படையில், அவர் இருந்ததைப் போன்று, கொலை செய்ய அனுமதிக்கப்பட்டவராகிவிடுவீர்.

فوائد الحديث

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதாக உணர்த்தும் விதத்தில், ஏதாவது சொல் அல்லது செயல் அவரிடமிருந்து வெளிப்பட்டால் அவரைக் கொலைசெய்வது ஹராமாகும்.

யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது நிராகரிப்பாளர்களில் யாராவது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் - அதற்கு முரணாக ஏதாவது தெளிவாக வெளிப்படும் வரை – அவர் கொலை செய்யப்படக் கூடாது. அவரது உயிர் பாதுகாக்கப் படவேண்டும்.

ஒரு முஸ்லிமின் மனோஇச்சை, மார்க்கத்திற்குக் கட்டப்பட்டு இருக்க வேண்டுமேயன்றி, பிடிவாதம், பழிவாங்கல் போன்றவற்றுக்கு அல்ல.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இவவாறு ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதே ஏற்றமான கருத்து என்ற அடிப்படையில், பிரச்சனைகள் நிகழ முன்னர் அவை பற்றிக் கேட்கலாம் என்பது இதிலிருந்து புரிகின்றது. சில ஸலபுகள் அவ்வாறான கேள்விகளை வெறுத்துள்ளமை என்பது, அரிதாக நடக்க வாய்ப்புள்ளவை தொடர்பாகத்தான் என்று தான் விளங்கிக்கொள்ளப்படவேண்டும். பரவலாக நடக்க வாய்ப்புள்ளவை பற்றிக் கேட்டு, அது பற்றி அறிந்துகொள்வதை மார்க்கம் அனுமதித்துள்ளது.

التصنيفات

இஸ்லாம்