நபி (ஸல்) அவர்கள் ''என் தந்தையின் சகோதரரே! 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)' என்று…

நபி (ஸல்) அவர்கள் ''என் தந்தையின் சகோதரரே! 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)' என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்'

ஸஈத் இப்னுல் முஸய்யிப் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள் : (நபி (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர்) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே அவரருகே அபூஜஹ்லையும் , 'அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முஃகீரா'வையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''என் தந்தையின் சகோதரரே! 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)' என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்' என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் : அபூதாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை வெறுத்து ஒதுக்கப்போகிறீர்களா? என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவரிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க்கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது ''நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்' என்பதாகவே இருந்தது. 'லா இலாஹ இல்லல்லாஹ்' எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்' என்று சொன்னார்கள். அப்போதுதான் ''இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும், இறைநம்பிக்கையாளர் களுக்கும் உரிமை இல்லை' எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ''(நபியே!) நீர் விரும்பியவரை (யெல்லாம்) நல்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக அல்லாஹ் தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான்' எனும் (கஸஸ் : 56 ஆவது) வசனத்தை அருளினான்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சிறிய தந்தை அபூதாலிபிடம் அவர் மரணத்தருவாயில் இருக்கும் வேளை சென்று அவரிடம் : சிறிய தந்தையே' லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர உண்மையான இறைவன் எவரும் இல்லை) என்று கூறுங்கள். உமக்காக இந்த வார்த்தைக்கு அல்லாஹ்விடம் சான்று பகர்பவனாக இருப்பேன், என்று கூறினார்கள். அதற்கு அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் அபூ தாலிபே ! சிலை வணக்கமான உமது தந்தை அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டுவிடவா பார்க்கிறீர்? என்று கூறினர். இறுதியாக அபூதாலிப் அவர்கள் தான் அப்துல் முத்தலிபின் மார்க்கமான இணைவைப்பு மற்றும சிலைவணக்கத்தில் இருப்பதாக கூறும் வரையில் அவரிடம்; அவர்கள் இருவரும் அப்துல் முத்தலிபின் மார்க்கம் குறித்து தொடர்ந்தும் கூறிக் கொண்டே இருந்தனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எனது இரட்சகன் தடுக்காது விட்டால் உமக்காக நான் பாவமன்னிப்புக்காக பிரார்த்திப்பேன் என்று கூற, அல்லாஹ்வின் பின்வரும் வசனம் இறங்கியது : "இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?)" (தவ்பா : 113). மேலும் அபூதாலிப் தொடர்பாக பின்வரும் இறைவசனமும் இறங்கியது : "(நபியே!) நிச்சயமாக இவர்களில் நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ், தான் விரும்பியவர்களை(த்தான்) நேரான வழியில் செலுத்துகிறான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்". (கஸஸ் : 56). ஆக, உம்மால் நீ விரும்பியவரை நேர்வழிப்படுத்திட முடியாது. உமது பணியெல்லாம் எத்திவைப்பது மாத்திரமே! ஆல்லாஹ்வே நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.

فوائد الحديث

இணைவைப்பாளர்கள் எவ்வளவு நெருங்கிய உறவினர்களாக இருந்து அவர்களின் செயலும் உபகாரமும் சிறப்பானதாக அமைந்தாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருதல் தடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்களை அசத்தியத்தில் கண்மூடித்தனமாக பின்பற்றுதல் ஜாஹிலியாக்கால மக்களின் செயல்களில் உள்ளதாகும்.

மக்களை சத்திய மார்க்கத்தின் பால் அழைத்து அவர்களை நேர்வழிப்படுத்திட வேண்டும் என்ற நபியவர்களின் பேரவாவும்; அவர்களின் மீதான பூரண கருணையும் இதில் எடுத்துக் காட்டப் படுகின்றமை.

அபூதாலிப் இஸ்லாத்தைத் தழுவினார் என்று நம்புவோருக்கான மறுப்பு இந்த சம்பவத்தில் காணப்படுகின்றமை.

செயல்கள் யாவும் அவற்றின் இறுதி முடிவுகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன.

நலனை பெற்றுக்கொள்ளவும் அல்லது தீங்கை தடுப்பதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையோ அவர்கள் அல்லாதவர்களையோ நாடுவது அங்கீகரிக்கப்படாத விடயமாகும்.

யார் ஒருவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற வார்த்தையை அறிவும்; உறுதியும் நம்பிக்கையும் நிறைந்த நிலையில் கூறுகிறாரோ அவர் இஸ்லாத்தை தழுவியவராவார்.

மனிதனில் தீய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவுகாளால் ஏற்படும் பாதிப்பை இந்த சம்பவம் எடுத்தியம்புகின்றமை.

'லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் : சிலைகள் மற்றும் ,அவ்லியாக்கள் -இறைநேசர்கள்- சான்றோர்கள் ஆகியோரை வணங்குவதை விட்டுவிட்டு அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதைக் குறிக்கும். இணைவைப்பாளர்கள் இதன் கருத்தை அறிந்திருந்தனர்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பில் இணைவைப்பாளரான நோயாளியை சுகம் விசாரிக்கச் செல்வது அனுமதிக்கத்தக்கதாகும்.

நேர்வழியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குதல் எவ்வித இணையுமில்லாத ஏகனான அல்லாஹ்வின் கையில் உள்ளது. ரஸுல் ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம் அவர்களைப் பொறுத்தவரை நேர்வழியின் பால் வழிகாட்டுதல், அறிவுறுத்துதல்; மற்றும் எத்திவைத்தல் போன்றவை அவரின் மீதான பொறுப்பாகும்.

التصنيفات

அல்குர்ஆன் விளக்கவுரை, அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்