அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனித்திருக்கட்டும்.…

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனித்திருக்கட்டும். அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறவர் தனது அயல் வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனித்திருக்கட்டும். அல்லாஹ்வையும் இறுதிநாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது அயல் வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ஒருங்கிணைந்த சில சமூகவியல் அடிப்படைகளை அறிவிக்கின்றார்கள். “யார் நம்புகிறாரோ” எனும் நிபந்தனை வாக்கியத்தைக் கூறிவிட்டு “அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனித்திருக்கட்டும்” என பதில் வாக்கியத்தையும் கூறுகின்றார்கள். இந்த வசன அமைப்பின் நோக்கம் நல்லதைப் பேசுதல், அல்லது வாய் மூடியிருத்தலை ஊக்குவித்து, ஆர்வமூட்டுவதாகும். “நீ அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பினால் நல்லதைப் பேசு, அல்லது மௌனித்திரு” என்று கூறுவதைப் போன்றாகும். “நல்லதைப் பேசட்டும்” என்பதன் அர்த்தம் அப்பேச்சில் சில வேளை தனக்கு நன்மைகள் ஏதுமில்லாவிடினும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் தனிமையைப் போக்கி, நல்லிணக்கம் ஏற்படுவதால் அவர்களை மகிழ்விக்கும் வார்த்தைகளைப் பேசுவதும் இதில் அடங்கும் என்பதாகும். "அல்லாஹ்வையும் இறுதிநாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது அயல் வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்." : அதாவது தனது வீட்டுடனிருக்கும் அயலவராகும். கடை போன்ற வியாபாரஸ்தளத்திலும் அயலவர்களைக் கவனிப்பது இதில் அடங்கும் என்பதே தெளிவாகின்றது. இருப்பினும் வீட்டுடனிருக்கும் அயலவர் விடயத்தில் இது மிகத் தெளிவாக இருக்கின்றது. எவ்வளவு நெருக்கமோ அந்தளவு அவர்களுக்குரிய உரிமைகளும் பெரிதாகி விடுகின்றது. பணம் கொடுத்தல், தர்மம் செய்தல், ஆடை வழங்குதல் போன்று குறித்த ஒன்றை நபியவர்கள் இங்கு கூறாமல் பொதுவாக "கண்ணியப்படுத்தட்டும்" என்றே கூறியுள்ளார்கள். மார்க்கத்தில் இவ்வாறு பொதுப்படையாக வரும் அனைத்திலும் அப்பிரதேச வழக்காற்றையே கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இங்கு கண்ணியப்படுத்தலும் குறிப்பான ஒன்றின் மூலமல்ல, மக்கள் கண்ணியப்படுத்தலாகக் கருதுவதே இங்கு கவனத்திற்கொள்ளப்படும். அயலவருக்கு அயலவர் இதில் மாறுபடுவர். வறியவரான ஓர் அயலவருக்கு சில வேளை ஓர் உரொட்டித் துண்டின் மூலம் கண்ணியப்படுத்துவது போதுமானதாகும், செல்வந்தரான அயலவருக்கு இது போதாது, சாதாரண ஓர் அயலவருக்கு குறைந்தளவு கண்ணியப்படுத்துவது போதுமானதாகும், ஆனால் முக்கிய பிரமுகராக இருக்கும் அயலவருக்கு இதைவிட அதிகம் தேவைப்படும். அயலவர் என்பவர் அடுத்த வீட்டுக்காரரா?, எதிர்த்த வீட்டுக்காரரா?, கடைத்தொகுதியில் அடுத்த கடைக்காரரா? என்பதையும் அப்பிரதேச வழக்காறே தீர்மானிக்கும். “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” விருந்தாளி என்பவர் எம்மை நாடி வரும் பயணி, அல்லது எமது வீடு தேடி வருபவரே. இவர்களை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்துவது அவசியமாகும். கிராமங்களிலேயே விருந்தினரைக் கவனிப்பது கடமை, நகர்ப்புறம், பெருநகரங்களில் அது கடமையில்லை என சில அறிஞர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இப்பகுதிகளில் செல்வதற்குப் போதியளவு உணவகங்கள், விடுதிகள் தாராளமாக உள்ளன, கிராமப்புறங்களில் மேற்கண்ட வசதிகள் இன்மையால் மனிதன் ஒதுங்க இடம் தேவைப்படுகின்றது. இருப்பினும் நபிமொழியில் “தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” எனப் பொதுவாக இடம்பெற்றுள்ளதால் இதனைப் பொதுச்சட்டமாகவே எடுக்க வேண்டும்.

فوائد الحديث

நாவின் விபரீதங்களை எச்சரித்தல், மனிதன் தான் பேசப்போகும் விடயத்தை சிந்தித்தே பேச வேண்டும்.

நல்ல விடயத்தைத் தவிர வாய்மூடி இருப்பது அவசியமாகும்.

அயலவரின் உரிமைகளை அறிந்து, அந்த உறவைப் பேணி, அவரை கண்ணியப்படுத்துவதை ஊக்குவித்தல்.

விருந்தினரை கண்ணியப்படுத்துமாறு ஏவப்பட்டுள்ளது, இது இஸ்லாமிய ஒழுக்கங்களிலும், நபிமார்களின் பண்புகளிலும் உள்ளதாகும்.

பிறமதங்களைப் போன்றல்லாமல் இஸ்லாம் நல்லிணக்கம், நெருக்கம், பரஸ்பரம் அறிமுகத்திற்குரிய ஒரு மதமாகும்.

அல்லாஹ்வையும், மறுமையையும் விசுவாசிப்பதுதான் அனைத்து நன்மைகளினதும் அடிப்படையாகும், தனது செயலைக் கண்காணிக்கவும், அல்லாஹ்வை அஞ்சவும், ஆதரவு வைக்கவும் அது தூண்டுகின்றது. கட்டுப்படுதலுக்கு மிகப் பலமான உந்துசக்தியாக உள்ள இது ஆரம்பம் முதல் (சுவனம் அல்லது நரகம் எனும்) இறுதி ஒதுங்குமிடம் வரை அனைத்து நிகழ்வுகளையும் உள்ளடக்குகின்றது.

பேச்சுக்களில் நல்லது, கெட்டது, இரண்டுமற்றது என மூன்று வகைகள் உண்டு.

மேற்கண்ட விடயங்கள் ஈமானின் கிளைகளாகவும், உயர்ந்த நற்பண்புகளாகவும் உள்ளன.

நற்செயல்களும் இறைநம்பிக்கையில் உள்ளடங்குகின்றது.

இறைநம்பிக்கை (நன்மை செய்யும் போது) கூடவும் செய்யும், (பாவங்களின் போது) குறையவும் செய்யும்.

التصنيفات

நற்குணங்கள்