சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு.

சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு.

உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்கள் : "நான் நபி (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ''சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு'' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்முஸலமா (ரலி) அவர்களின் புதல்வராவார், நபியவர்களின் பாசறையில் அன்னாரிடமே வளர்ந்தார்கள். இவர் இந்நபிமொழியில் உண்ணும் போது தட்டில் அங்குமிங்கும் உணவைப் பொறுக்குவதற்காக கைகளை அலையவிட்டதாகத் தனது நிலையைக் கூறுகின்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவருக்கு உணவுமுறையில் மூன்று ஒழுக்கங்களைக் கற்பித்தார்கள். 1. ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் என அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல். 2. வலது கரத்தால் உண்ணுதல். 3. தனக்கு முன்னால் உள்ளதை உண்ணுதல். ஏனெனில் பிறருக்கு முன்னுள்ளதை உண்ணுவது ஒழுக்கக் குறைவாகும். இருப்பினும் தட்டில் பூசணி, கத்திரிக்காய் மற்றும் இறைச்சி போன்ற பல வகையான உணவுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை எடுப்பதற்காக தட்டில் அவையிருக்கும் இடத்திற்குக் கை நகர்வதில் தவறேதுமில்லை என அறிஞர்கள் விதிவிலக்களித்துள்ளனர். அதே போன்றுதான் ஒருவர் தனியாக உண்ணும் போதும் தட்டின் எப்பகுதியிலிருந்தும் உண்ணலாம். அதனால் யாருக்கும் பாதிப்பேதுமில்லை.

فوائد الحديث

உண்ணும் ஒழுங்குகளில் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூறுவதும் ஒன்றாகும்.

வலது கரத்தால் உண்பது கடமையாகும், தகுந்த காரணமின்றி இடது கையால் உண்பது ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக்கையால் தான் பருகுகிறான்". ஷைத்தானைப் பின்பற்றுவது ஹராமாகும். யார் பிற சமூகத்திற்கு ஒப்பாகின்றாரோ அவரும் அதே கூட்டத்தைச் சார்ந்தவராவார்.

சிறுவர், முதியோரில் அறியாமலிருப்போருக்கு - குறிப்பாக ஒருவரின் பொறுப்பில் இருப்பவர்களுக்குக் - கற்றுக் கொடுப்பது விரும்பத்தக்கதாகும்.

உணவுத்தட்டில் பிறருக்கு முன்னிலையில் உள்ளதை எடுக்காமல் தனக்கு முன்னிலையில் உள்ளதை மாத்திரம் உண்பது உணவுமுறையிலுள்ளதாகும்.

நபி (ஸல்) அவர்களின் போதனைகளைத் தோழர்கள் கடைபிடித்து வந்தனர். "அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது" என்ற உமர் பின் அபீ ஸலமாவின் வார்த்தையிலிருந்து இதனை அறியலாம்.

التصنيفات

உண்ணல், குடித்தலின் ஒழுங்குகள், உண்ணல், குடித்தலின் ஒழுங்குகள்